Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Wednesday, November 5, 2014

My country :-)



அலுவலகம் செல்லும் வழியில்,
நகர நெரிசலில் இருந்து ,
சற்றே விலகி காத்திருக்கும்,
அந்த ஆலமரம் ...
விழுதுகள் புடைசூழ,
விழுதுகளே ஆதாரமாய்,
பெருமித மதர்ப்புடன்,
பல சமயம்....
விழுதுகளே பாரமாய் ,
தாள முடியாத ஆயாசத்துடன்,
சோர்வாய் சில சமயம் ...
ஆனால்,
என்றும் விழுதுகளே,
தன் அடையாளமாய்...

Saturday, November 19, 2011

Fixture

வாழும் முறைமையென
விதித்திட்ட விதிமுறைகள்
கானல் நீராய் கரைந்திட,
அயலான உணர்வுகள்
அகலாமல் ஆர்ப்பரித்திட,
மோனத்தில் கரையும்
மோகத்துளிகள்
ஈளையிவள் என இடித்துரைக்க,
கண்ணனுக்காய் காத்திருக்கும்
கோதைகளை பரிகசித்த செறுமை,
சிந்தையில் எச்சமாய் சிதறிட,
நானும் காதலில் விழ விழைகிறேன் ...
ஆயினும் ,
ஒவ்வொரு முறையும்
சிந்தைக்கு செயல் வடிவம் கொடுக்கும்,
இருத்தலை இயலாய் கருதும்
எனக்குள் வாழும் ஒருத்தி
தலையிலடித்து சிரிக்கிறாள்...

Sunday, April 17, 2011

நிலையற்ற மனம்

இந்த பழக்கம் விட்டு விடு
எதிர்கொள்ள முடியா மௌனங்களை
வார்த்தைகள் இட்டு நிரப்புவதை
நிரப்பப்பட்ட வாக்கியங்களில்
அர்த்தங்கள் தேடுவதை...
கற்பிக்க பட்ட அர்த்தங்களை
ஏற்று கொள்ள முடியாமல் அலைபாய்வதை
வாக்கியங்களின் ஆர்பரிப்பில்
அமைதியிழந்து மீண்டும் மௌனமாவதை ...
இந்த பழக்கம் இன்றேனும் விட்டு விடு .

Thursday, September 10, 2009

வாழ மறந்த வாழ்க்கை

நினைத்தவாரல்லாமல் நடக்கும்
நிகழ்வுகளையும்
பொருள் கொள்ள முடியா
உணர்வுகளையும்
பின்னொருகாலத்தில்
பிறிதொரு நேரத்தில்
பொறுமையாய் எதிர்கொள்ளலாம்
என்றெண்ணி மனதின் மூலையில்
புதைக்கின்றேன்.
புதைப்பவை பயன்படா
படிமங்களாய் பரிணாமம்
செய்வதை உணராமல்.
இவ்வாறே
என் வாழ்க்கை நகர்கின்றது
நான் வாழ மறந்த நொடிகளை
சுமந்தபடி ...

பெயரிடப் படாமலேயே போகட்டும்...

குமுறலாய் தோன்றும் உணர்வுகளை
அழகாய் பிரித்தறிந்து
வார்த்தைகளில் வடிவமைத்து
அணிகள் பல கூட்டி
வறையரைக்குள் உட்படுத்துவதன்
வெளிப்பாடு மட்டுமே கவிதை
எனில் இப்பகுதியில் உள்ளவை
பெயரிடப் படாமலேயே போகட்டும்...